மதம் தெரிவித்தது என்ன? நாம் தெரிந்து கொண்டது என்ன?

Posted on April 13, 2013

2அனைவருக்கும் வணக்கம்! என்னுடைய இந்த பதிவில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கருத்து ஓரளவிற்கு உங்கள் மனதில் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் ஏதேனும் உங்களது மனதினை புண்படச் செய்திருந்தால் மன்னிக்கவும்.

என்னுடைய தாய் திரு நாட்டின் பாதங்களை வணங்கி, இப்பதிவை முழு மன நிறைவுடன் சமர்ப்பிக்கிறேன்!

இந்தியாவின் வரலாற்று ஆய்வுகளையும், கலாச்சார ஆய்வுகளையும் இதுவரை கட்டுரைகளாக இந்த இணையத்தில் சமர்ப்பித்திருக்கிறேன். இந்தியாவின் மிகப் பெரிய பாரம்பரியத்தை சிறுமை படுத்தும் நோக்கில் நம் பாரத தேசத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சில குற்றச்சாட்டுகளை உலக அரங்கில் பலர் முன்வைக்கிறார்கள், இதை நாமும் அவ்வப்போது நிருபித்துக் கொண்டிருக்கிறோம். சரி விடயத்திற்கு வருவோம்!

இந்தியாவின் மிகப்பெரிய பிற்போக்காக உலக அரங்கிலும், உள் நாட்டு மக்களிடையேவும் கருதப்படும் ஒரு சில அம்சங்களையும் அதன் உண்மை வடிவங்களையும் இங்கு எடுத்து வைக்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக அவற்றைப் பற்றிய பார்வையை கொடுக்கும் முன் அதை இங்கே பட்டியலிடுகிறேன்.

1) மதம், 2) ஜாதி, 3) பெண் உரிமை

மதம் குறித்த ஒரு மிகப்பெரிய புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்திய அரசாங்கம் மட்டுமல்ல, உலக அரசியலே தவறி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை. இதற்கு பல அரசியல் காரணங்கள் இருந்தாலும் அதை நான் இங்கே குறிப்பிடப்போவதில்லை. ஆனால் மதங்களின் நோக்கமும், காரண, காரணிகளும் அனைவருக்கும் விளங்கிவிட்டால் உலக அரசியலே நடுங்கிப் போகும் என்ற விடயத்தைக் கூறிக்கொண்டு மேற்கொண்டு தொடர்கிறேன்.

உலக அளவில் நூற்றுக்கணக்கான மதங்கள் இருந்தாலும், அதில் மிகப் பிரதானமான அதிக மக்கள் பின்பற்றும் மதங்களாக கருதப்படுவது கிறித்துவம், பௌத்தம், இஸ்லாம் (முஸ்லீம்), இந்து, சைனம், சீக்கியம் ஆகியவை. இதை எல்லாம் தவிர இன்னொரு மதமும் இங்கே உள்ளது அது மதமே இல்லை என்னும் மதம் ஆகும். இவர்களுக்கு இவர்களே இட்ட பெயர் “பகுத்தறிவு”. சரி, இவர்களுக்கு நாம் பின்னர் வருவோம்.

முதலில், பாரத தேசத்தின் பாரம்பரிய, மிகப் பழமையான மதமாக கருதப்படும் இந்து மதத்தில் இருந்து தொடர்கிறேன். உலகம் முழுவதும் ஏறக்குறைய 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்து மதத் தத்துவங்களைப் பின்பற்றுகிறார்கள் என்றாலும் அவர்களில் ஒரு கையளவு மக்களுக்கே இந்து மதம் என்றொரு மதமே இல்லை என்பது தெரியும். இதைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை வேண்டுமெனில் சில வரலாற்று விடயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் என்னால் முடிந்த அறிவைப் பயன்படுத்தி கூற விளைகிறேன்.

உலகின் முதல் மனிதன் தோற்றம் பெற்ற நாளில் இருந்து அவனுடைய ஒவ்வொரு அனுபவமும், அறிவியலாக தொகுக்கப்பட்டு பின் வந்த சந்ததிகளுக்கு பல வழிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்படி உலகின் முதல் மனிதன் தோற்றம் பெற்ற இடம், தென்னிந்தியா. மனிதனின் படைப்புகளில் மிகப் பெரிய ஒன்று மொழி. அப்படி முதலில் தோற்றம் பெற்ற மொழி தமிழாகவே இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இங்கே மனிதன் என்று நாம் குறிப்பிடுவது அறிவியலில் ஹோமோ சேப்பியன்ச் (Homo Sapiens) என்று கூறப்படும் உங்களையும், என்னையும் போன்ற சாதாரண மனிதர்கள். இதற்கு முன்னர் ஹொமினாய்டுகள் போன்ற அறைவேக்காட்டு மனிதர்கள் வாழ்ந்திருந்தாலும் அவர்களை மனிதர்களாக கருதமுடியாது. ஆக இந்த ஹோமொ சேப்பியன்ஸ் எனப்படும் நிகழ்கால மனிதர்கள் உலகின் ஒரு மூளையில் வசித்து வந்த போது அவர்கள் கற்றறிந்த உண்மைகள், பெற்றுக்கொண்ட அனுபவங்களைத் தங்களது சந்ததிகளுக்கு தங்களது மொழி வாயிலாக தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். எப்படி நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வளங்குகிறோர்களோ அது போலத் தான். மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், உங்கள் குழந்தை எரிகின்ற நெருப்பில் கையை வைக்கப் போகும் போது நீங்கள் அதை தடுக்கிறீர்கள். ஏன் தடுக்கிறீர்கள்? ஏனென்றால் நெருப்பு சுடும் என்று உங்களுக்குத் தெரியும், அதை ஏற்கனவே நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். ஆக உங்களுக்குத் தெரிந்த அறிவியலை உங்கள் குழந்தைக்கு சொல்லித் தருகிறீர்கள். நீங்கள் அனுபவப்பட்டது இல்லை என்றாலும் அது உங்களது பெற்றோர் மூலமாக உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். இந்த மிகப் பெரிய அறிவியல் பரிமாற்றம் தான் உலகத்தை இன்று வரை பல வகை மாற்றங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் மதம் பற்றிய உண்மையை நாம் உணர்ந்து விட்டோம் என்றே அர்த்தம்.

என்னப்பா சின்னதா ஒரு கதைய சொல்லி அவ்வளவுதான் நு சொல்லுற? அப்படினு கேட்குறீங்களா? உண்மையிலேயே அவ்வளவு தான்ங்க…

ஆக உலகில் முதன் முதலில் தோற்றம் பெற்ற மனிதக்கூட்டம் தன்னுடைய அனுபவங்களை அறிவியலாக முதலில் செய்கையால் பரிமாறியது. பின்னர் இது கடினமாக இருந்த போது மொழி என்னும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது. உலகில் முதல் மொழி தோற்றம் பெற்ற போதே இலக்கணமும், எழுத்துக்களும் தோற்றம் பெறவில்லை. இவை அனைத்தும் காலம் கடந்து நிற்க வேண்டும் என்று மனிதன் எண்ணிய போதே எழுத்துக்கள் உருவாகின. எழுத்துக்களை முறையாக வரையருக்க வேண்டும் என்று மனிதன் எண்ணும் போது இலக்கணம் உருவானது. ஆக தமிழ் மொழியும் கூட ஓரிரு நாளில் உருவானதல்ல. தமிழுக்கும் முன்னர் சில மொழிகளும் தோன்றி மறைந்திருக்கக்கூடும் என்பது தான் உண்மை. ஒரு மிக நேர்த்தியான, செம்மையான இலக்கணமும் வடிவமும் தான் தமிழ் மொழியை இன்று வரை மட்டும்மல்ல இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் அழியாமல் பாதுகாக்கும். தமிழில் இருந்து கிளை மொழியாக சமஸ்கிருதமும் இன்ன பிற மொழிகளும் பின்னர் தோன்றியது.

பழங்கால தமிழர்களும், தமிழ் வரலாறுகளும் கடலோடு போன பிறகு, எஞ்சியிருந்த தமிழன் வடக்கே குடியேறிஅங்கே சிந்து சமவெளி நாகரீகம் என்று அதுவரை அவன் தெற்கில் கையாண்டு வந்த பழக்க வழக்கங்களையும், அறிவியலையும் அங்கே நிறுவினான். எனது, சிந்து சமவெளி நாகரீகம் தமிழருடையதா? இது என்னப்பா புதுக் கதை விடற, அப்படினு கேட்குறவங்களுக்கு அன்பான வேண்டுகோள், கதை மட்டும் கேட்கனும்! (இது பற்றிய வரலாற்று ஆய்வுகளை, ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்! இதிலும் இந்திய அரசியல் விளையாண்டுள்ளது என்பதைப் பின்னர் தெளிவுபடுத்துகிறேன்)

ஆக அங்கு சிந்து சமவெளி நாகரீகம் நிருவப்பட்ட பிறகு. அங்கே ஒரு மொழிச் சிதைவு ஏற்பட்டது. நம்மூரில் மதுரையில் ஒரு மொழி, கோவையில் ஒரு மொழி, நெல்லையில் ஒரு மொழி, சென்னையில் ஒரு தனி மொழி எனப் பேசப்படுவது போல அங்கே அப்போது ஒரு மொழி தோன்றியிருக்கக் கூடும். அது சமஸ்கிருதமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி சமஸ்கிருதம் என்பது தமிழனின் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பே ஆகும். அது என்னப்பா கண்டுபிடிப்பு?

வேதங்களை உச்சரிக்கும் போதும், மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றை குறிப்பிட்ட ஒரு ஒலி அளவையில் உச்சரிக்க வேண்டும். அது ஏன் அப்படி உச்சரிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு உச்சரிப்பும் ஒரு வகையான அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வலைகள் நமது உடம்பில் உள்ள ஹார்மோன்களையும், மூளையையும் தூண்டிவிட்டு சிறப்பாக செயல்பட வைக்கும் என்பது தற்போதிய அறிவியல் கண்டுபிடித்த கண்டுபிடிப்பே ஆகும். இந்த சமஸ்கிருத வேத ஞானங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாய்வழியே தன் சந்ததிகளுக்கு கற்றுத் தரப்பட்டது. ஆக சமஸ்கிருதம் என்பது ஒரு அறிவியலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொழி. இதனால் தான் வேதங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டன.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், சமஸ்கிருதம் தோன்றி பல காலங்களுக்கு அதற்கென தனி ஒரு இலக்கணமும், எழுத்துருவும் வகுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. சம்ஸ்கிருத இலக்கணம் என்பது பனினி என்னும் ரிஷியினுடைய காலத்தில் தான் வகுக்கப்பட்டது, ஆனால் அதற்கு முன்னர் பல காலங்களாக சமஸ்கிருதம் இருக்கத்தான் செய்தது. சுமார் 10,000 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டது ரிக் வேதம், அதன் பின் யஜுர், சாம, அதர்வன என்று ஒவ்வொரு காலகட்டத்தில் வேதங்கள் தோற்றம் பெற்றன. ரிக் வேதம் பல முறை மாற்றி அமைக்கப்படது. ஆக இவை அனைத்தும், நமக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களின் அனுபவங்களைத் தொகுத்து எழுதப்பட்ட புத்தகமே ஆகும். நான்கு வேதங்களிலுமே இவை ஒரு மத நூல்களாகவோ, அல்லது இவற்றை பின்பற்றுபவர்களை இந்துக்கலாகவோ குறிப்பிடப்படவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான இந்துக்களுக்கு தெரியாத ஒரு விடயம் அவர்கள் பின்பற்றுவது சனதான தர்மம். சனதான தர்மம் என்றால் ஒன்றும் இல்லை, மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நீதி நூல். ஆனால் அது ஒரு போதும் எந்த ஒரு தனி மனிதனையும் கட்டாயப்படுத்தவில்லை. இப்படி வாழ்ந்தால் வாழ்வு நன்றாக இருக்கும் என்பது மட்டுமே அது தெளிவு படுத்துகிறது.

அப்படியா அப்படினா நாம எல்லாரும் இந்து மதம் நு சொல்றோமே அது என்னப்பா? பகவத் கீதை, இராமாயணம் தான இந்து மதத்தோட நூல்கள்?

பகவத்கீதையிலும், இராமாயணத்திலும் அவை இந்து மத நூல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும்! இல்லவே இல்லை என்பது தான் உண்மை. நம்மிடையே உள்ள மிகப்பெரிய பிரச்சனை, யார் எது சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்வோம். அது நம் கலாச்சாரம் கற்றுகொடுத்த ஒரு பழக்கம்!

சிந்து நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் சிந்து மக்கள் என்றழைக்கப்பட்டனர், பின்னர் மன்னர் அலெக்ஸாண்டர் பாரதத்தின் மீது போர் தொடுக்க வரும் போது அங்கு வாழ்ந்த மக்களை இந்து என்று அழைத்தார் (காரணம் சி என்ற உச்சரிப்பு அப்போது அவரது மொழியில் இல்லை). பின்னர் இங்கு வந்த அரபு நாட்டார் ஹிந்து என்றழைக்க அங்கு வாழ்ந்தவர்களது பெயர் இந்துவாகவும், ஹிந்துவாகவும் மாறியது என்பது தான் வரலாற்று உண்மை. இதுவே பாரதம், பின்னாளில் இருந்து இன்று வரை இந்தியா என்றழைக்கப்பட காரணமானதும்.

இப்போ சொல்லுங்க இந்து மதம் நு ஒன்னு இருக்கா? சொல்லப் போனால் முகலாய படையெடுப்புக்கு முன்னர் மதம் என்ற ஒன்று உலகிலேயே இல்லை என்பது தான் உண்மை.

நான் ஏற்கனவே கூறியது போல உலகின் ஒரு பகுதியில் வாழ்ந்த தமிழன், தன் அடுக்கடுக்கான அனுபவங்களையும், அறிவியலையும் கொண்டு ஒரு மாபெரும் கலாச்சாரத்தை நிறுவினான். அவனது வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு குறிப்புகளையும் தனது வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்ல அதைப் பாதுகாத்தான். கலாச்சாரத்தை நிறுவியது மட்டும் அல்லாமல் பரந்த பூவுலகில் பரவவும் ஆரம்பித்தான். அப்படி பரவிய போது அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, எகிப்து போன்ற தொலை தேசங்களுக்குச் சென்றான். அப்படிச் சென்றவனுக்கு அவன் இங்கு முன்னர் வாழ்ந்தது போன்ற சூழல் அமையவில்லை. உதாரணத்திற்கு இங்கு இருக்கும் தட்ப வெட்பம், இயற்கை சூழல் வேறு, அமெரிக்காவில் இருக்கும் இயற்கை சூழல் வேறு. அங்கு போய் இங்கு போல் தான் அங்கும் வாழ்வேன் என்று மூடத்தனமாக பேசிக்கொண்டு அவன் துன்பப்படவில்லை. அங்கு சென்றதும், அங்கு இருந்த தட்ப வெட்ப நிலை, இயற்கை சூழல், மண்வளம் ஆகியவற்றிற்க்கு ஏற்றாவாறு கலாச்சாரம், தொழில், உணவு பழக்கம், விவசாயம் ஆகியவற்றை உருவாக்கினான். இப்படி உருவானது தான் உலக கலாச்சாரம். ஆம் நண்பர்களே, உலக கலாச்சாரங்களில் ஒன்றோடு ஒன்றிர்க்கு பெரும் தொடர்பு இருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிருந்து மெக்ஸிகோ, ஜாவா, கம்போடியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா, எகிப்து, சீனா, கொரியா என உலகின் அனைத்து மூளை முடுக்குகளிலும் சென்று தமிழன் வாழ்ந்தான். அங்கு தன் கலாச்சாரம் நிறுவப்பட்டு, பின்னர் அதில் உள்ள சில சிக்கல்கள் படிப்படியாக களையப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு உருவானது தான் மற்ற நாகரீகங்களும், கலாச்சாரங்களும்.

உதாரணமாக உலக மொழிகள் பெரும்பாலானவற்றில் தமிழ் மொழி கலப்பு உள்ளது. இங்கிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த தென் அமெரிக்க மக்கள் படகுகளை “கட்டுமரம்” என்று தான் அழைத்தார்கள். கொரிய மொழியின் நேரடித் தாய் மொழி தமிழ்! சமஸ்கிருதம், மலையாளம், கண்ணடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளின் தாய் மொழி, தமிழ்! இது தவிர லத்தின், பிரஞ்சு, அரேபிய மற்றும் கிரேக்க மொழிகளில் தமிழ் மொழியின் ஆதிக்கம் உள்ளது. உதாரணமாக தமிழ் மொழியில் பசுவை “கோ” என்றழைப்பதுண்டு. இன்றுவரை அத்துனை மொழிகளிலும் பசுவை “கோ”, என்றும் “கௌ” என்றும் தான் அழைக்கிறார்கள். மேலும் தமிழ் மொழிச் சொற்கள் பலவற்றின் முன் “அத்”, “ஸ்” என்ற சொற்கள் சேர்க்கப்பட்டு திரிந்து தான் அரேபிய மொழியாகவும், மேற்கத்திய மொழிகளாகவும் உருப்பெற்றது. இதற்கு காரணம் அங்கிருந்த குளிர்ந்த மற்றும் மிக மிஞ்சிய சூடான தட்ப் வெட்ப மாற்றங்களே. ஒரே நாட்டிற்குள்ளே பல வகையான தமிழ் உலாவும் போது, உலகளவில் செல்லும் போது அது எவ்வகை மாற்றத்தைக் கண்டிருக்கும் என்று நீங்களே சிந்த்தித்துப் பாருங்கள்!

இப்படி ஆங்காங்கே குடியேறிய மக்கள் தங்களுக்கென ஒரு கலாச்சசாரத்தை நிறுவினார்கள். பின்னர் உலகம் முழுவதும் மக்கள் தொகை மட மடவென உயர்ந்தது. நதிப்படுகைகளில் அமைந்த நகரங்களில் மக்கள் அடர்த்தி உயர்ந்தது. மக்கள் அடர்த்தி ஓரிடத்தில் உயரும் போது அங்கு வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தொடங்கும். இதை ஆங்கிலத்தில் “Struggle for Existence” என்று சொல்லுவார்கள். உலகம் தோன்றியது முதலே உலகின் பல்வேறு இடங்கள் பலவகை இயற்கை மாற்றங்கள், தட்ப வெட்ப மாறுதல்களைச் சந்தித்து இருக்கிறது. இப்படி இன்னல்கள் அதிகரிக்கும் போது வாழ்வாதாரத்திர்க்கான போராட்டம் அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் போது மக்கள் சுலபமாக ஒழுங்கீனச் செயல்களிலும், இறக்கமற்ற செயல்களிலும் ஈடுபடுவது நிதர்சனம். ஆக இந்த சூழ்னிலையில் அவர்களுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அப்படி வகுக்கப்படும் விதிமுறைகளை நீங்களோ, நானோ சென்று சொன்னால் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆக அப்போது தோன்றியவர்கள் (தோன்றியவர்களா அல்லது தோற்றுவிக்கப்பட்டவர்களா என எடுத்துக்கொள்வது உங்கள் மன நிலையைப் பொருத்தது) கடவுள்கள். நம்மை எல்லாம் பெற்றவன் சொன்னால் நாம் நிச்சயமாக கேட்க கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆக மனிதன் இப்படித் தான் ஒழுக்கத்துடனும், நீதியுடனும் வாழ வேண்டும் என்று வரையருத்து அதை மக்களிடம் கொண்டு சென்று கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் கடவுள்கள். இவர்கள் சொன்னதை மக்கள் பின்பற்றிய வரை எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. இதற்குள் ஆய்வுகளைத் தொடங்கும் போது தான் பிரச்சனை எழும்புகிறது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கடவுள்கள் தோற்றம் பெற்றன. நான் இங்கே தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கிய விடயம் இருக்கிறது. மதம் என்பது வழிபாடு சார்ந்த ஒன்றே கிடையாது.

முருகனை வழிபடுவதால் இந்து என்றோ, கிறித்துவை வழிபடுவதால் கிறித்துவர் என்றோ அல்லது அல்லாவை வழிபடுவதால் இஸ்லாமியர் என்றோ கூறுவது தவறு. நமக்கு புரியும் விதத்தில் சொல்ல வேண்டுமானால், சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் சைவம், வைஷ்ணவம் என்று இரு பிரிவுகள் இருந்தது. இவ்விரண்டும் பல நூற்றாண்டுகளாக எலியும், பூனையுமாக இருந்த போதும் அவர்கள் அனைவருமே இந்து மதத்தவர்களாகவே குறிப்பிடப்பட்டார்கள். இதே போல கிறித்துவத்திலும் வழிபாட்டுக் கடவுள்கள் வெவ்வேறாக இருந்தாலும் (இயேசு கிறிஸ்து, மரியா அன்னை) அவர்கள் அனைவரும் கிறித்துவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆக மதம் என்பது வழிபாடு சம்பந்தப்பட்டது அல்ல. உலகின் தென் கிழக்கு நாகரீகம், பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழ்ந்த மக்கள் இந்துக்கள். அதே போல மேற்கில் முளைத்த நாகரீகம், மற்றும் பாரம்பரியத்தைப் பின்பற்றுபவர்கள் கிறித்துவர்கள் ஆக்கப்பட்டனர். அப்படியானால் மதம் என்பது வாழ்விடம் சார்ந்ததே தவிர, வழிபடு சார்ந்தது கிடையாது.

கலாச்சாரம் என்பதே வாழ்விடம் சார்ந்தது, மதம் எப்படி வாழ்விடம் சார்ந்ததாகும் என்ற கேள்வி எழுந்தால். கலாச்சாரம் தான் பின் நாளில் மதமாக மாற்றியமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மதம் என்ற பாகுபாடு வந்தது மொகலாய படையெடுப்பின் போது தான் என்று நான் சொன்னேன். ஆமாம், மொகலாய படையெடுப்பின் போது இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் இங்கு ஆட்சியமைக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்களால் அவர்கள் பழகிய கலாச்சாரத்தை மாற்ற முடியவில்லை. எனவே அவர்கள் முன்னர் கொண்ட ஆடைகள், மொழி, அறிவியல், பண்பாடு, பழக்கவழக்கங்களைத் தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்தது மட்டுமல்லாமல் அதை இங்கிருந்தோரிடமும் பழக்கினர். எப்படி வெள்ளையர்கள் இங்கு வந்து தமிழ் கற்க மறுத்து ஆங்கிலம் கற்பித்தார்களோ, அதே போல நமது கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களது கலாச்சாரத்தை ஊன்றினார்கள். இது தொடர்ந்து கொண்டிருந்த போது மக்களிடயே இரு பிரிவினர்கள் உருவானார்கள். ஒன்று தமிழ் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்கள் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட பாரம்பரியத்தைப் பின்பற்றுபவர்கள். அப்போது தான் இந்த பிரிவினை, கலாச்சாரம் என்ற பெயரில் இருந்து மதம் என்ற பெயர் கொள்ள ஆரம்பித்தது. இது பின்னர் மூன்று, நான்கு என வளர்ந்துகொண்டே போனது. மிக எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் நமது தாய், தந்தை, பிள்ளைகள், மனையாள் என ஒரு குடும்பமாக வாழ்ந்து வரும் போது அங்கே ஒரு விருந்தாளி வந்து தங்குகிறார் என்றால் எத்தனை நாளுக்கு நீங்கள் அவரை உபசரிப்பீர்கள். நான்கு நாட்களுக்கு அப்பால் அங்கே அவருக்கு கிடைக்கும் மரியாதையே வேறு. காரணம் அவர் அந்நியர். ஏன்? ஏனென்றால் அவர் என் குடும்பத்தில் ஒருவராக இல்லை. ஆக அந்நியம் என்பது நமக்கு எப்போது தோன்றுகிறது வெளியில் இருந்து ஏதொ ஒன்று  வரும் போது. அது இங்கு இல்லாத வரை அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஆக வேறு ஒரு கலாச்சாரம் வந்து இன்னொரு கலாச்சாரத்தில் நுழையும் வரையில் மதம் என்ற ஒன்றும், பிரிவினை என்ற ஒன்றும் இல்லை.

மிகக் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது தான் இதன் வெளிப்பாடு அதிகமாக பிரதிபளித்தது. இந்தியர்கள் இந்துக்களாக சித்தரிக்கப்படும் போது அவர்களுக்கு மத நூலாக எதை நிர்ணயிப்பது என்ற கேள்வி எழும்புகையிலேதான் பகவத்கீதையும், இராமாயணமும் முன் நிருத்தப்பட்டது. அதற்கு முன்னர் அவை வெறும் நீதி நூல்களே தவிர மத நூல்களாக சித்தரிக்கப்படவில்லை. இன்றும் கூட இந்து மத நூல்களாக சித்தரிக்கப்படும் அனைத்து வேத, இதிகாச நூல்களிலும் ஆய்வு செய்து பாருங்கள். அவற்றுள் அவை மத நூல்கள், அவற்றை கடைபிடிப்பவர்கள் ஹிந்துக்கள் என்று எங்கேயாவது குறிப்பு உள்ளதா என தேடிப் பாருங்கள். இப்படித் தான் மதம் என்பது கலாச்சாரம் என்ற பார்வையில் இருந்து உணர்வாக, கௌரவமாக, பாரம்பரியமாக, பிரிவினையாக, கடவுள் சம்மந்தமானதாக படிப்படியாக முன் நிருத்தப்பட்டது.

இந்து மதம் மட்டும் அல்ல, ஏனைய அனைத்து மதங்களுமே இப்படித் தான் அதன் உண்மை நிலையை இழந்தது. விவிலியம் சொல்லுவதெல்லாம் மனிதன் எப்படி மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்பதே. அது ஒரு நீதி நூலே தவிர மத நூல் அல்ல. இதே போலத் தான் இஸ்லாமியம், பௌத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களும் அவற்றின் நூல்களும்.

இந்த நூல்கள் மட்டும் அல்லாமல், பழக்க வழக்கங்கள் வாயிலாக அறிவியலையும் கற்பித்திருக்கின்றன இந்த கலாச்சாரங்கள். மருத்துவம், அறிவியல், நடைமுறை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் இவற்றோடு சேர்த்து நீதியையும் இணைத்து கடவுள் என்னும் ஊடகம் வாயிலாக கற்றுக்கொடுத்தனர்.  இன்றைக்கு கேலிக்கூத்தாகத் தெரியும் பழக்கவழக்கங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் அனைத்திலும் அறிவியல் உண்டு. உலகெங்கும் நமக்கு முன்னர் வாழ்ந்த அத்துனை பெரியோரும் நம்மை விடப் புத்திசாலிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அவர்களுக்கு எதை அறிவியலாக போதிக்க வேண்டும், ஆன்மிகமாக போதிக்க வேண்டும், அடக்குமுறையாக போதிக்க வேண்டும் என்று நன்றாகத் தெரிந்திருந்த்தது. வளர்ச்சி என்பது எல்லாத்தரப்பு மக்களையும் சென்றடைவதில் தான் அதன் செயலாக்கத் திறமை உள்ளது. அதை எந்த வாயிலாகவும் தெரிவிக்கலாம். ஆக எந்த விடயத்திற்கு எந்த ஆயுதத்தைக் கையால வேண்டும் என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்த நம் முன்னோர்களின் அறிவை நம்மால் புரிய முடியவில்லை என்றாலும் சிறுமை படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.  நம் முன்னோர்கள் என்று குறிப்பிடப்படுவது எல்லாமே அனைவரையுமே குறிக்கும். அது இந்து மதப் பெரியோர்களாகட்டும், கிறித்துவ மதப் பெரியோர்களாகட்டும், இஸ்லாமிய மதப் பெரியோர்களாகட்டும், அல்லது பிற மதப் பெரியோர்களாகட்டும். ஆக நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது எல்லாம் உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் தோன்றிய கலாச்சாரங்கள் நாளடைவில் மதங்களாக கற்ப்பிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் வாழ்ந்த இயற்கை சூழலுக்கும், தட்ப வெட்ப நிலைக்கும் ஏற்றவாறு அது மாறுபட்டு இருந்தது. இவை அனைத்தும் பெரும்பாலும் பல நூற்றாண்டுகளாக பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்டதால் இவைகளுக்கிடையே மிகப் பெரிய வித்தியாசம் தோன்றியது.  உலகின் ஒரு காலகட்டத்தில் ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றியவர் மற்ற கலாச்சார இடங்களுக்குள் நுழையும் போது அவர்கள் அதற்கு ஒத்துப்போக முடியாமல்  தங்களது கலாச்சாரத்தை நிறுவினார்கள். இதை அங்கே இருப்பவர்கள் எதிர்க்கும் போது தான் மதம் என்ற பிரிவினை உண்டானது.

ஆக நாம் வசிக்கும் இடத்திற்கும், வாழ்விடத்திற்கும், இயற்கைக்கும் ஏற்றவாரு நமது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளவதில் தவறு ஒன்றும் இல்லை. அது தான் அறிவுடைமை ஆகும். -5 டிகிரி குளிர் பிரதேசத்திற்கு சென்று வேட்டி கட்டுவது என்னுடைய கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. மத நம்பிக்கையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உலகின் எந்த மூளையில் நீங்கள் இருந்தாலும் உங்கள் விருப்பக் கடவுளை நீங்கள் வணங்கலாம். ஆனால் மதத்தை நீங்கள் மற்றவர் மீது திணிப்பது அர்த்தம் இல்லாதது.

மத போதனைகளை அறிவியலாக பார்க்கத் தெரியாததே மனித சமுதாயத்தைப் பின்னோக்கித் தள்ளிக்கொண்டு போக காரணம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கட்டிக்காக்கப்பட்ட மதங்களின் அடையாளம் இன்று ஆடைகளிலும், சங்கிலிகளிலும், பெயர்களிலுமே தென்படுகின்றன. அவற்றைப் பற்றி புரிந்து கொள்ளாத மக்கள் அவற்றைப் பற்றி அவதூறு பேசுவதும், ஆயுதம் ஆக்குவதும் எப்படி நியாயம் ஆகும்! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

Posted in: Facts