300மி.லி கண்ணீர்! விலை ரூ 12/- மட்டும்!

Posted on November 22, 2014

02000 ஆம் ஆண்டு, கடவுளின் சொந்த தேசம் என்று கூறப்படும் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டங்களில் பாலக்காடு மாவட்டமும் ஒன்று. பொதுவாக பாலக்காடு மாவட்டம் பிற மாநில மக்களிடையே மிகப் பிரசித்தம். காரணம் கேரளத்திற்கு சென்று வந்தவர்கள் யாரும் இந்த மாவட்டத்தைக் கடக்காமல் சென்றிருக்க மாட்டார்கள். பாலக்காடு, கேரளத்தின் தலைவாசல் என்றே கூறலாம்.

Rice Fields - Palakkad

Rice Fields – Palakkad

     பாலக்காடு மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி சின்னஞ்சிறு அழகிய கிராமத்தைப் பற்றிய கதை தான் இது. பாரதபுழா, கேரளாவின் இரண்டாவது மிக நீளமான நதி. அதை பார்ப்பதற்கே மனிதன் இன்னொரு பிறவி எடுக்கலாம். பறந்து விரிந்த காடுகளுக்கு இடையில் சலசலவென சப்தமிட்டு ஆர்ப்பரித்து ஓடி வரும் அந்த ஆற்றின் அழகு காண்போர் யாரையும் மெய் மறக்கச் செய்யும். அதிகாலை நேரம் ஆற்றங்கரையோரம், பனிபடர்ந்த மேகக்கூட்டங்கள் விழக கடவுளின் சொந்த தேசத்தில் புற்களின் ஓரம் படர்ந்துள்ள பனித்துளியைக் கண்டுகொண்டே சாரல்மழையில் நினைந்து உருகும் உல்லாசம் எளிதில் நமக்கு வாய்த்திடாது. அப்படி ஒவ்வொரு நாளும் இயற்கையை இரசித்து, அனுபவித்து வந்த மக்கள் தான் பெருமாட்டி கிராமத்தின் பிளாச்சிமடா பகுதி மக்கள்.

     பிளாச்சிமடா மக்களின் பெரும்பகுதியுனர் இந்த தேசத்து பழங்குடியினர். அவர்களின் பிரதான தொழில் விவசாயம். தமிழ்நாட்டின் தஞ்சை தரணியைப் போல கேரளத்தின் நெல் களஞ்சியமாக பிளாச்சிமடா விளங்கியது. சுமார் என்பது சகித மக்களின் பிரதான தொழிலாய் விவசாயம் இருந்தது. இவர்கள் யாரும் நேற்றோ இன்றோ சேற்றில் கால் வைத்தவர்கள் அல்ல, காலம் காலமாக விவசாயம் குறித்த பாரம்பரிய அறிவுடன் விவசாயம் செய்து வந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலை, கேரளத்தின் ஏன் உலகத்திற்கே அட்சய பாத்திரம் எனலாம். மனிதனின் பெரும்பாலான நோய்களுக்கு மருந்து வேண்டும் என்றால் நீங்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு தான் வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல இந்தியாவின் பல மாநில மக்கள் இன்னும் உயிரோடு உலாவிக் கொண்டிருக்க மேற்கு தொடர்ச்சி மலை ஒரு முக்கிய காரணம்.

Malampuzha-River

Malampuzha-River

     கேரளத்தின் முக்கிய நீராதாரமான இந்த மேற்கு தொடர்ச்சி மழை அங்குள்ள நதிகளுக்கு வருடம் முழுவதும் ஜீவன் வழங்கிக்கொண்டிருக்கிறது. அதே ஜீவகாருண்யத்தை தான் மலம்புழா நதியும் பெற்றது. இதனால் அந்த சுற்றுவட்டார பகுதியில் தண்ணீருக்கு பிரச்சனை என்று அதுவரையில் யாரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.

     அன்றைய நாள் அதிகாலை பொழுது விடிந்தது, மேகம் மெல்ல மெல்ல விலக பனித்திரையைக் கிழித்துக் கொண்டு தங்க நிறத்தொடு ஜொலித்தவாரு கதிரவனின் கதிர்கள் வந்து அந்த கிராமத்திற்குள் நுழைந்தது. நிசப்தம் விலகி மெல்ல மெல்ல ஜன நடமாட்டத்தின் சப்தம் கேட்கத் தொடங்கியது. ஊரின் ஒரு பகுதியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட நிறுவனத்திற்கு அது முதல் நாள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நெல் விளைந்த பூமி, அதிக விலை, வளர்ச்சி, ஊர்காரர்களுக்கு வேலைவாய்ப்பு என்று பல்வேறு ஆசை வார்த்தைகளையும், உத்திரவாதங்களையும் முதலீடாய் வைத்து தொடங்கப்பட்ட நிறுவனம்.

xc“இந்துஸ்தான் கொக்கோ கோலா” இது தான் அந்த நிறுவனம். ஆம் 12ரூபாய்க்கு நாம் வாங்கி பெருமிதத்தோடு குடிக்கிறோமல்லவா அந்த கொக்கோ கோலா நிறுவனம் தான் அது. அந்த கோலா கம்பெனியின் முக்கிய மூலப் பொருள் “தண்ணீர், தண்ணீர், தண்ணீர் தான்”. ஆகவே தண்ணீர் வளம் அதிகமுள்ள அந்த இடத்தை தேர்வு செய்தது அந்த நிறுவனம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. ஒரு குளிர்பான கம்பெனிக்கு முக்கிய மூலப்பொருள் தண்ணீர் தான் அதனால் அவர்கள் தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்தில் தான் அந்த நிறுவனத்தை அமைப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

     2002 ஆம் ஆண்டு, அருகில் இருந்த விவசாயக் கிணறுகளில் நீர் அதி வேகமாக வற்றுவதை மக்கள் உணர்ந்தார்கள். அவர்கள் குடிக்கும் நிலத்தடி நீரின் தன்மையும் மாறிப்போனது. நிறுவனத்தின் கழிவுகள் அருகில் இருந்த விவசாய நிலங்களில் கொட்டப்பட்டது. நிலங்கள் விவசாயத்திற்கு இலாயக்கற்றதாகிப்போனது.

    6725271469_967bbe1532 பசும்போர்வை போர்த்திய வயல்வெளிகள் யாவும் தரிசு நிலமாய் காச்சியளித்தது. ஆலைக்கழிவுகள் விளை நிலங்களில் பரவு துர்நாற்றம் வீசி, ஊர் எங்கும் வியாதிகள் என அந்த கிராமத்தின் அடையாளமே மாறிப்போனது. முன்னர் சொன்ன் காட்சியையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள் உங்கள் நெஞ்சு வலிக்கும்!

கோகோ கோலா, தம்ஸ் அப், லிம்கா, ஃபாண்டா, ஸ்ப்ரைட், மாஸா போன்ற குளிர் பானங்கள் அந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. இதற்காக நாள் ஒன்றிற்க்கு 15,00,000லி (1.5 மில்லியன் லிட்டர்) தண்ணீர் உறிஞ்சப்பட்டது. இந்த 1.5 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு அந்த நிறுவனம் ஊருக்கு கொடுத்த வெகுமதி 400 பேருக்கு வேலைவாய்ப்பும், ஆண்டுக்கு 6,50,000ரூ ரொக்க வரியும் மட்டுமே.

exploring5அது தான் வேலைவாய்ப்பு வந்துவிட்டதே பிறகு என்ன? அவர்கள் விவசாயத்தை விட்டு கஷ்டப்படாமல் வேறு வேலை பார்க்கலாமே என்று எண்ணினால் சற்று சிந்திக்கவும். அங்கு இருந்த பழம்குடியினருக்கு அங்கு அந்த நிறுவனம் என்ன வேலை வழங்கியிருக்கும்? பொறியாளர் பதவியா? கண்காணிப்பாளர் பதவியா? கூட்டிப், பெருக்கி, சுத்தம் செய்து காவல் காக்க வேண்டும். விவசாயம் செய்து முதலாளியாய் வாழ்ந்த அந்த மண்ணின் சொந்தக்காரர்களை அதே மண்ணில் சற்றும் உரிமை இல்லாத ஒருவன் அடிமை வேலை வழங்குகிறான். சரி, 10 ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனம் தண்ணீர் வற்றிய பின் ஆலையை இழுத்து மூடிவிட்டு சென்று விட்டால் இவர்களது வேலை என்னாவது? ஊர் மக்களின் வாழ்வாதாரம் என்னாவது? நீங்களும் நானும் ஆயுள் முழுதம் உண்ண உணவு வழங்கிக் கொண்டிருந்த பூமி அது. ஒரு வாரம், மூன்று வேலையும் கொக்கோ கோலா மட்டும் குடித்து நம்மால் உயிர் வாழ்ந்து விட முடியுமா?

இது தொடர்கதையானது, பொது மக்கள் அரசாங்கத்திடம் முறையிட்டனர். வேலை ஆனபாடில்லை. 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி “பிளாச்சிமடா போராட்டம்” தொடங்கியது. ஜானு என்னும் அம்மையார் வழி நடத்திச்செல்ல, மயிலம்மா என்னும் 50 வயது மூதாட்டியின் தலைமியில் நடந்தது அந்த போராட்டம். ஆம், முறையே 54%க்கும் மேலான இளைஞர்கள் விகிதத்தைக் கொண்ட நமது நாட்டில், போராட்டத்தை தொடங்கி வைத்தவர் 50 வயது ஆதிவாசி விதவை மூதாட்டி.

coke_plant_protest_2005051695

2002ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி கொக்கோ கோலா நிறுவனத்தின் வாசலில் நின்று அறவழியில் போராடிக்கொண்டிருந்த பெண்களை தாக்கி கைது செய்ததில் 7 பெண்கள் படுகாயயமுற்றனர். இன் நிலையில் ஜனவரி 26 2003இல் மேதா பட்கரால் இந்த சம்பவத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல பாதயாத்திரை நடத்தப்பட்டது. பின்னர் மக்கள் போராட்டத்தின் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணன் எனும் பெருமாட்டி கிராமத்து பஞ்சாயத்து தலைவர் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தார்.

லண்டனைச் சேர்ந்த ஒரு ஆய்வகத்தின் மூலம் செய்த ரசாயனச் சோதனையில், பிளாச்சிமடா கிராமத்தின் நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டுள்ளது என்றும், இந்நீரில் நச்சுத் தன்மைவாய்ந்த கேட்மியம் (50மி.கி/கிலோ) மற்றும் ஈயம் போன்ற ரசாயனப் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது. இதையே மத்திய சுற்றுச்சூழல் வாரியமும் தனது சோதனையில் உறுதி செய்து பாராளுமன்ற உயர்நிலைக்குழுவிற்குத் தெரிவித்தது.

‘நிலத்தடி நீர் என்பது அப்பகுதி மக்களுக்கு உரிமையானது. மாநில அரசும், அதன் நிர்வாகமும் இந்த அரிய செல்வத்தை பாதுகாப்பதில் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறது. அந்த நிலத்தடி நீரை, அதன் மீது உரிமையற்றோர், அதிகமாக உறிஞ்சுவதையும், அசுத்தமாக்குவதையும் அனுமதிக்க அரசு இடங்கொடுக்காது. அது மக்கள் நலனைக் காக்கும்.’ என்றதொரு வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவை கேரளா உயர்நீதிமன்றம் வழங்கியது. இது இப்போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

இந்திய பாராளுமன்ற உயர்நிலைக்குழு, பிளாச்சிமட கிராமத்தின் விவசாயம், விளைநிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதால், கேரள மாநில அரசு தலையிட்டு கிராம மக்கள் நலனைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு, பாராளுமன்ற உயர்நிலைக்குழுவின் பரிந்துரைகள் ஆகியவைகளை கவனத்தில் கொண்டு கேரள அரசாங்கம் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என கோகோ கோலா நிறுவனத்திற்கு பிப்ரவரி 17- 2004ல் தடைவிதித்தது.

2004 மார்ச் மாதம் பாலக்காடு மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்பதையும் கேரள அரசாங்கம் அறிவித்தது. அதன் பின்பு ஜனவரி மாதம் 2006 ஆம் வருடம் முதல் அந்த நிறுவனம் தனது செய்ல்பாடுகளை நிறுத்திக் கொண்டு ஆலையை மூடியது.

coca-cola-no-entryபிளச்சிமடா ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வு. கேரளத்தின் நெற்களஞ்சியம் நான்கே ஆண்டுகளில் வறட்சி மாவட்டம் ஆனதன் கொடுமையை இன்றளவும் மறக்க முடியாது. 12ரூபாய்க்கு விற்கப்பட்டு நாம் வாங்கிக் குடிப்பது பல பேறது கண்ணீர் மற்றும் இரத்தத்தின் கலவை தான். இன்றும் இந்தியாவில் எண்ணிலடங்கா பிளாச்சிமடாக்கள் உள்ளன. இவர்களின் வியாபாரத்திற்கு மூலதனம் அப்பாவி பொதுமக்களின் கண்ணீரும், நம் தேசத்தின் வளமும் மட்டுமே.

Posted in: Uncategorized