தேசிய நீர் கொ(ல்)ள்கை!!!


அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட ‘தேசிய நீர்க்கொள்கை- 2012’ வரைவைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அப்படி என்ன சொல்கிறது, புதிய வரைவுத் திட்டம்?

ஐ.நா சபையின் எச்சரிக்கையின் பேரிலும், மிக வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீரை காப்பாற்றவும் சத்தமில்லாமல் சட்டம் வரப்போகுதாம். இதை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12ஆம் (2012 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்) ஐந்தாண்டு திட்டத்தில் செயல்படுத்திட முனைப்புடன் செயல்பட்டு வருகிறதாம்.

நிலத்தடி நீரைக் காப்பது நல்ல விஷயம் தானே என்று நினைக்கலாம் ஆனால் இதை கொஞ்சம் முழுவதுமாக படிக்கவும். அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற பல நாடுகளின் நடைமுறைகளை ஒப்பிட்டு இத்திட்டம் நிறைவேற்றப் பட உள்ளதாம். நிலத்திற்கு அடியில் இருக்கும் எல்லாம் பொதுவானது தான், அது அரசாங்கத்திற்கு சொந்தம் என்ற வகையில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது உங்கள் வீட்டு நிலத்தின் அடியில் இருக்கும் நீர் உங்களுக்கு சொந்தமானது அல்ல. பொதுவான நதி நீரை பிற மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு மறுக்கும் போது ஊமையாய் இருக்கும் மத்திய அரசுக்கு இன்று தீடிரென ஞானம் பிறந்திருக்கிறதோ? மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீர் பொது உடைமை ஆனால் பெட்ரோலும் டீசலும் வானத்திலிருந்தா விழுகிறது? அது மட்டும் ஏன் கார்ப்பரேட் வசம் உள்ளது? அதை விடுங்கள் நம் தலையில் அடுத்து விழும் இடியைப்பற்றி யோசிப்போம். அடுத்து வரும் துன்பத்தை நினைத்து முன்னால் நடந்ததை மறப்பது தானே நம் இயல்பு!!! இத்திட்டத்தின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அசல் வெளியீடு மத்திய அரசு இணையதளத்தில் உள்ளது. அல்லது அதை படிக்க விரும்பினால் கீழ்கண்ட முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

http://mowr.gov.in/writereaddata/linkimages/DraftNWP2012_English9353289094.pdf

http://mowr.gov.in/writereaddata/linkimages/nwp20025617515534.pdf

http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=79981

http://planningcommission.nic.in/reports/genrep/rep_grndwat.pdf

முதலில்அதன்தேவைஎன்ன?

இதற்கு முன் 2002ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிறது. அது நீர்ப் பயன்பாடு, நிலத்தடி நீராதாரங்கள்,அவற்றை பாதுகாப்பது, நீர்வழித்தடங்கள், கால்வாய்கள், நீர்வள ஆதார அமைப்புகளை பாதுகாப்பது, செறிவூட்டுவது, மற்றும் மேம்படுத்துவது சம்பந்தமாகவும், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப உதவிகள், மக்களிடம் விழிப்புணர்வு, துல்லிய நீர்ப்பயன்பாடு, மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை ஆகியவற்றைக் குறித்த விளக்கமான ஒரு வரைவாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பைக் குறித்தும் அது பேசுகிறது. அது, முந்தைய 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கையை விட பலபடிகள் மேலானதாகவும், சிறந்ததாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பங்கீடு, புதிய பாசன அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் பற்றி எதுவும் இந்த வரைவில் தெளிவாகச் சொல்லப்படவில்லை, ஸ்வஜல்தாரா, IAMWARM திட்டங்கள் சிறப்பாகசெயல்பட்டுக்கொண்டுள்ள வேளையில் UPA II அரசாங்கம், இவ்விஷயத்தில் இரண்டு வகையாக சமூக நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது –

1. நிலத்தடி நீர், உள்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள், மற்றும் நிலத்தடி நீராதாரங்களில் மக்களுக்கோ, அந்தந்த மாநில அரசுகளுக்கோ எந்தவித உரிமையும் இல்லை, அனைத்தும் மத்திய அரசுக்கே உரியது என்றும் அவை தனியாருக்கு ஏல முறையில் திறந்து விடப்படும் என்றும் புதிய வரைவுக் கொள்கை கூறுகிறது.

2. தண்ணீர் மற்றும் கழிவுநீருக்கு வரி விதிப்பது என்றும் வரைவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாசனம், குடிநீர் வினியோகம், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரம் ஆகிவற்றில் இருந்துஅரசாங்கம் முழுவதும் விலகிகொண்டு தனியாரை இந்த துறையில் ஈடுபடுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், இரு அரசுகளுக்கும் பொதுவான பட்டியல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இதில்மாநில பட்டியலில் 17-வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை அடங்கியுள்ளன. புதிய கொள்கை இதை மறுத்து ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறது இந்த வரைவு.

அதேபோல 1882-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, ‘நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையில்லை’என்று மாற்றவேண்டும் என்கிறது புதிய கொள்கை. இதன்படி குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. அதாவது, ஒரேயடியாக மக்களின் பாரம்பரிய உரிமையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறிக்கிறது மத்திய அரசின் புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.

இதன்படி கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 40 லிட்டருக்கு மிகாமலும், நகரத்தில் ஒரு நபருக்கு 80 லிட்டருக்கு மிகாமலும் குறைந்தபட்ச விலையில் வழங்கவும், அதற்குமேல் உபயோகப் படுத்தப் படும் நீருக்கு அடுக்கு முறையில் வரி விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

மேலும் நீங்கள் வெளியேற்றும் கழிவுநீருக்கு தனி வரி என்ற புதிய சிந்தனையையும் முன்வைத்திருக்கிறது. இதோடு 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. 1) குடிநீர், 2) விவசாயம், 3) நீர் மின்சாரம், 4) சுற்றுச்சூழல், 5) விவசாயம் சார் மற்றும் விவசாயம் சாரா தொழில்கள், 6) போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடுகள் என்பதுதான் 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமை வரிசை. குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போடப்பட்டுள்ள இந்த திட்டம், வாட்டர் தீம் பார்க்குகளுக்கும், பெருந்தொழிற்சாலைகளுக்கும் பொருந்துமா என்ற எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இது தான் அரசு சொல்ல விரும்பும் மறைமுகமான செய்தி.

2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் இது குறித்த ஆய்வறிக்கை தெரிவிக்கும் செய்திகள் என்னவென்றால்

  1. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தில் மாற்றம் ஏற்படும். விவசாய நிலங்களுக்கு பாய்ச்சும் நீரின் அளவு அல்லது பயன்படும் மின்சாரத்திற்கு வரி வசூலிக்கப்படும்.
  2. நீர் சிக்கனத்தை கறுத்தில் கொண்டு விவசாய முறைகளில் மாற்றம் வரும்.
  3. நீங்கள் தினசரி பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை ஒரு இயந்திரத்தைப் பொறுத்தி கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் வரி வசூலிக்கப்படும்.
  4. விவசாயத்திற்காக பயன்படும் நீரில் (மின்சாரம் மூலம் எடுக்கப்படும் நீரில் மட்டும்) மின்சார பயன்பாட்டிற்கு செலவாகும் மின்சாரத்தில் மானியம். அதாவது முதல் 3000 கி.வாட்டுக்கு கிலோ வாட்டுக்கு ரூபாய் 2 விதம் 6000 ரூபாய் வசூலுக்கப்படுமாம். அதற்கு மேல் பயன்படுத்தினால் சாதாரண கட்டணம் செலுத்த வேண்டும். குறைவாக பயன்படுத்தினால் மீதத் தொகை திருப்பித் தரப்படுமாம்.
  5. இலவச மின்சாரத்தை முறைப்படுத்த விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தனி பீடர்கள் (வழித்தடங்கள்) அமைக்கப்படுமாம்.
  6. இந்த தனி பீடர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுமாம்.

தேசிய நீர்க் கொள்கை – 2012 இன் முன்வரைவில், 7 வது அத்தியாயத்தில் முதல் பிரிவு இவ்வாறு கூறுகிறது:

7. WATER PRICING 7.1 Over and above the pre-emptive uses for sustaining life and eco-system, water needs to be treated as an economic good and therefore, may be priced to promote efficient use and maximizing value from water. While the practice of administered prices may have to be continued…

அதாவது, தண்ணீர் இனிமேல் அத்தியாவசிய பொருள் அல்ல; அது வர்த்தக நோக்கத்துக்குரிய பண்டம். நீருக்கு வரி விதிப்பதற்கு அரசு சொல்லும் நியாயம் என்ன தெரியுமா? 2 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 80 கோடி பேர் உள்ளனர். அரசின் பெரும்பாலான சேவைகளான ரயில், பொது போக்குவரத்து மற்றும் இன்ன பிற சமூகநலத்திட்டத்தின் பயனாளிகள் நடுத்தர மக்களும் கீழ் நடுத்தர, மற்றும் வறுமைக் கோட்டுக்கு அருகிலும் கீழும் வசிக்கும் மக்கள் தான். ஆனால் அவர்கள் வரி எதையும்நேரடியாகச் செலுத்துவதில்லை. எனவே இவர்களை நேரடியாக வரி செலுத்தும் அமைப்புக்குள் கொண்டு வரும் விதமாக, இவர்கள் அதிகம் உபயோகிக்கும் தண்ணீர் மற்றும் உப்புமீது வரி விதிக்கலாம் என்ற அரிய கருத்தை முன் வைக்கிறார்கள்.  மத்திய அமைச்சரும் இந்த திட்டக் குழுவின் துணைத் தலைவருமான ஒருவர் சொல்லும் செய்தி என்னவென்றால் ஓர் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி 2,00,000 லிட்டருக்கு மேல் தண்ணீரை செலவு செய்து விவசாயம் பார்க்கிறார். அவர் ஈட்டும் வருமானமோ ஒருலட்சத்திற்கும் கீழ். அரசுக்கும் வருமானம் இல்லை; வெறும் செலவு தான். எனவே நீரை வீணாக்கும் விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் தரகருக்கு குறைவானவரியும் விதிக்க்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.

நீர் என்பது வெறும் பொருளாதாரப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பது, முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானதாகும். ஓர் அரசின் கடமை என்பது அதன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது. ஆனால் UPA II அரசு, குடிநீர், சுகாதாரம், கல்வி, தொலைதொடர்பு, வங்கி, காப்பீடு, சுரங்கம்- இவற்றை தனியார் வசம் ஒப்படைத்து விட்டு, நிர்வாகம் செய்வது மட்டுமே தனது கடமை என்று நினைப்பது போலத் தெரிகிறது.

ஒரு நாளுக்கு 40 லிட்டருக்குக் குறைவான நீரை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்த முடியும்? இந்த நாகரீக உலகில், இந்தியர்களின் உணவுப்பழக்கம் மற்றும் கழிவறைபழக்கங்களைக் கொண்டு சராசரி இந்தியனுக்கு ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 66 லிட்டர் நீர் தேவை என்று உலக சுகாதர நிறுவனம் சொல்கிறது. மேலும் ஒரு மனிதனின் குடிநீர், உணவு, சுகாதார நடவடிக்கைகள், தொழில் உபயோகங்கள் இவற்றை கருத்தில் கொண்டால் ஒரு மனிதனின் “per capita water need’ (தனிநபரின் தண்ணீர்ப் பயன்பாட்டுத் தேவை) 185 லிட்டர் ஆகும் இதுவே டில்லியில் எடுக்கப்பட்ட ஆய்வு 240 லிட்டர் என்று தெரிவிக்கிறது. 40 லிட்டருக்கு மேல் செலவாகும் தண்ணீருக்கு வரி கட்டினால் மட்டுமே நீரைக் குடிக்கவோ, கழிவறையில் சுத்தம் செய்யவோ முடியும். வரி கட்ட முடியாதவர்கள் நீர் உபயோகிப்பதை சட்டம் போட்டு தடுப்போம் என்கிறது மத்திய அரசு. (பார்க்க: 7ம் படிவம்).

ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இப்போது அரிசி விலை 40 ரூபாய். இனி 100 ரூபாய்க்கு மேல் அரிசி விற்றால் யாரும் அதிசயப்படாதீர்கள். நிலத்தடி நீரை நீங்கள் உபயோகித்தால் அதற்கும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். நீர் என்பது பாரம்பரியமான உரிமை இல்லை; அது ஒரு பொருளாதார கருவி மட்டுமே என்கிறதுபுதிய வரைவு.

இனிமேல் நீங்கள் தாகம் அடித்தால் பெக்டெல், வெண்டி, டாடா, ரிலையன்ஸ் போன்ற தண்ணீர் வழங்கும் பெரு நிறுவங்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் தண்ணீர்குடிக்க முடியும். மீறி தாகம் எடுக்கிறது என்று நீரைக் குடித்தால் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் ஜாக்கிரதை. இவ்வளவு நல்ல சட்ட முன்வரைவை வைத்து மக்களின் உரிமைகளை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதையும் வழக்கம் போல ஏற்று கொள்ளப்போகிறோமா? இல்லை நம் எதிர்ப்பை பதிவு செய்யப் போகிறோமா? ஒரு முக்கியமான விஷயம், இந்த சட்ட முன்வரைவு குறித்து பொது மக்களின் கருத்தை பதிவு செய்ய பிப். 29 வரை கால அவகாசம் கொடுத்திருந்தது நமது மாண்பு மிகு மத்திய அரசு. ஆனால் இதுகுறித்த எந்தத் தகவலும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. கூடிய விரைவில், மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, ‘புதிய தேசிய நீர்க்கொள்கை- 2012′ அமல்படுத்தப்படுமோ? எதுவும் நடக்கலாம். தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது மக்களின் வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆக வேண்டிய விஷயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டுவந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.

2009ல் ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. அதை வழிமொழிவதன் மூலமாக நீங்கள் உலக வங்கியின் ஒரு பொருளாதார அடியாளை விட மோசமாக அரசு செயல்படுகிறதா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான போர்களால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையேஅதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல், இந்திய தண்ணீர் சந்தையை உலகப் பெருநிறுவனங்களுக்கு ஏலமுறையில் திறந்து விடலாம் என்று யோசனை சொல்வது எப்படி நியாயமாகும்?

அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளை எடுத்துக்காட்டாக முன்நிலைப் படுத்துவது முற்றிலும் தவறானது. இந்தியா தண்ணீரைப் பொறுத்த வரை தன்னிறைவு பெற்ற தேசம் தான். ஆண்டு தோறும் ஓடி வளம் கொடுக்க கூடிய ஆறுகளும் நீராதாரங்களும் இங்கே அதிகம். வெளி மாநிலங்களிடம் இருந்து பெற வேண்டிய நீர் பங்கீடை பெற முடியாமல் மாநிலங்கள் திண்டாடுவது போல, வெளி தேசத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நீர் உரிமையை பெற எந்த வழியும் செய்யாமல் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துவது ஏற்புடையது அல்ல. தேசத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் தத்தளிக்கும் போது ஒரு பகுதி வறட்சியில் தவிக்கிறது. முறையான நீர் பங்கீடு, நதிகள் தேசிய மையமாக்கள், தேசிய நதி நீர் இணைப்பு ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் கடலில் வீணாக கலக்கும் பெருமளவு நீரை சேமித்து நிலத்தடி நீரைப் பெருக்கலாம். இவை அத்தனையும் விட்டு கார்ப்பரேட் பக்கம் செல்வதையே அர்சாங்கம் விரும்புவது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உதாரணமாக தெரிவித்த மத்திய அரசாங்கம் ஏன் தென் அமெரிக்கா, பொலிவியா போன்ற நாடுகளைப் பற்றி குறிப்பிடவில்லை?

கொட்ச்சாபாம்பா நீர் புரட்சி:

2000 ஆம் ஆண்டு இதே நீர் கொள்கை பொலிவியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கும் இதே போல் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் முறை செயல்படுத்தப்பட்டது. அங்கே மக்களின் வருமானத்தில் பெரும் பகுதி குடிநீருக்காகவும், இதர பயன்பாட்டிற்குமே செலவழித்த அவலம் ஏற்பட்டது. தேவைக்காக மழை நீரை சேகரித்து வைத்தால், கார்ப்பரேட் குண்டர்களாலும், காவல் துறையினராலும் தண்ணீர் குடங்களும் தொட்டிகளும் அடித்து நாசம் ஆக்கப்பட்டது. இதை தாக்குபிடிகாத ஏழை மக்கள் சாக்கடை நீரை பயன்படுத்தும் அவலமும் அங்கே அரங்கேறியது. இதனால் சுகாதார சீர்கேடும் உயிரிழப்புகளும் பெருமளவு அதிகரித்தது. இதை அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் விட்டது. இதன் விளைவு அங்கே மக்களின் உணர்ச்சி ஆச்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. இதுகூடவா அரசாங்கத்திற்கு தெரியவில்லை? இல்லை மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நினைத்துவிட்டனரோ. பின்னர் ஏன் இந்த முடிவை பகிரங்கமாக வெளியிடாமல் இணையதளத்தில் மட்டும் வெளியிட்டனரோ!!!

பொலிவியா காட்சிகள் சில:

கட்டுறை : சு. யோகேஷ் கார்த்திக்

பத்திரிக்கை செய்திகள்:

http://articles.timesofindia.indiatimes.com/2012-03-12/pune/31152021_1_national-water-policy-water-services-water-treatment

தகவல்கள் :

நன்றி: திரு.வீர.ராஜமாணிக்கம்

மூல இடுகை:  http://www.tamilhindu.com/2012/03/on-upa-govt-national-water-policy/

Be the first to start a conversation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: